Home Circulars And Pastoral Letters

Circulars And Pastoral Letters

#

மலங்கரை சுறியானி கத்தோலிக்க திருஅவை இளையோர் தின செய்தி – 2020

இளையோர்களுக்கான ஆயர் மாமன்ற பணிக்குழு தலைவர் மேதகு ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் ஆண்டகை அவர்களின் செய்தி

“இளைஞனே நான் உனக்கு சொல்கிறேன், எழுந்திரு” (லூக்கா 7:14)

மதிப்பிற்குரிய குருக்களே, இருபால் துறவிகளே எனதருமை இளையோர்களே,

மலங்கரை கத்தோலிக்க திரு அவையாக உருவான மறுவொன்றிப்பு நடைபெற்று 90 வருடங்கள் கடந்து சென்றுவிட்டன. இதனை நினைவுகூறும் விழாவானது கடந்த மாதம் 20, 21 தியதிகளில் மாவேலிக்கரையில் வைத்து கொண்டாடப்பட்டது. மாவேலிக்கரை மறைமாவட்டம் பொறுப்பேற்று நடத்திய கொண்டாட்டங்கள் கோவிட் -19 என்னும் பெரும் தொற்று நோயின் சூழலில் மிக எளிமையாகவும் ஆனால் திரு அவைக்கு புத்துணர்வூட்டும் வகையிலும் மறுவொன்றிப்பு மற்றும் மறைதூதுப் பணிக்கான நம்முடைய அற்பணத்தை புதுப்பிக்கும் வகையிலும்கொண்டாடப்பட்டது. இது நம் மத்தியில் புது எழுச்சியை தந்துள்ளது. இத்தகைய பின்புலத்தில் மலங்கரை கத்தோலிக்க இளையோர் இயக்கத்தின் விண்ணக பாதுகாவலர் புனித பிரான்சிஸ் அசிசியின் திருநாளான அக்டோபர் மாதம் 4ஆம் தியதி ஞாயிற்றுகிழமையை திருஅவையானது இறையோர் தினமாக கொண்டாடுகிறது. இந்த இனியவேளையில் எனதருமை இளைய நண்பர்களையும் சிறப்பக திருஅவையின் இளையோர் பணியில் பங்கேற்கும் மதிப்பிற்குரிய குருக்களையும், அருட்சகோதரிகளையும், பொதுநிலையினர்களையும் வாழ்த்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

கோவிட்-19 என்ற தொற்று நோய் நமது சமூக வாழ்வில் தாக்காத துறையே இல்லை. அனுதின வாழ்வு, அடிப்படையில் மாற்றம் பெற்றுள்ளது. உறவுகளில் இணக்கங்களும், பிணக்கங்களும் ஏற்பட்டிருக்கின்றன. தொற்று நோயின் தாக்கம் எதிர்காலத்திற்கு வைக்கும் சவால்கள் கணிக்க முடியாதவை. அதிவிரைவில் இத்தொற்று நோய்க்கு தடுப்பு முறைகள் வரும் என்ற எதிர்நோக்கு நமக்கு உள்ளது. எனினும் தொழில் நுட்பமும், மருத்துவதுறையும் வானத்தை தொட்டிருந்தும் இந்த வைரசுக்கு முன்னால் ஒரு கைவிடப்பட்ட நிலையை உ ணர்கின்றனர். இவ்வுலக வாழ்வு நிலையற்றது என்பதையும்,. சமூக உறவுகள் வழங்கும் பாதுகாப்பு எவ்வளவு நிலையற்றது என்பதையும் சிந்திக்க வைக்கிறது. உண்மையில் கோவிட்-19 என்ற பெரும் தொற்று நோய் ஒரு புதிய தொடக்கத்திற்கான சவால் என்றே கூறலாம்.

கிறிஸ்துவில் வேரூன்றி வாழ்வோம்:

திருந்தந்தை பிரான்சிஸ் 35ஆம் உலக இளையோர் தினத்திற்கான மையசிந்தனையும், அதற்கு ஆயத்தம் செய்ய இருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கான மைய சிந்தனைகளையும் தந்துள்ளார். போர்ச்சுக்கல் நாட்டில் லிஸ்பனில் வைத்து நடைபெறும் உலக இளையோர் தின நிகழ்வுகள் “மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார்” (லூக்கா 1:39) என்ற கருத்தை மையப்படுத்தி நடைபெற உள்ளது. இதன் ஆயத்தத்திற்கான இரண்டு ஆண்டுகள் நாம் தியானிப்பதற்கும், சிந்திப்பதற்கும் இரண்டு இறைவார்த்தைகளை திருத்தந்தை தருகிறார். 2020ஆ ம் ஆண்டிற்கு “இளைஞனே, நான் உனக்கு சொல்கிறேன், எழுந்திரு” (லூக்கா 7:14) என்ற வசனத்தையும், 2021ஆம் ஆண்டிற்கு எழுந்து நிமிர்ந்து நில்! நீ பார்த்தவற்றிற்கு சாட்சியாக உன்னை ஏற்படுத்தினேன் (கண்: திப 26:16) என்ற வசனத்தை மையப்படுத்திய சிந்தனையும் திருத்தந்தை தந்திருக்கிறார். இந்த சொற்றொடர்களில் “எழுந்து நிமிர்ந்து நில்” அல்லது ‘எழுந்திடு’ போன்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. கிறிஸ்து வாழ்கிறார் என்னும் திருத்தூதுவ ஊக்கவுரையில் இச்சொற்கள் பலமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை ஒரு புதிய வாழ்வின் தொடக்கத்தை குறிப்பிடுகின்றன. “நீங்கள் உங்களது உள்ளூரம், உங்கள் கனவுகள், உங்கள் பேரார்வம், உ ங்களது எதிலும் நலமே காணும் நம்பிக்கைவாதம் மற்றும் உங்களது தாராளகுணம் ஆகியவற்றை இழந்திருந்தால், அன்று அந்த விதவையின் உயிரிழந்த மகனுக்கு முன்பு நின்ற இயேசு, உங்களுக்கு முன்பும் நிற்கிறார். அவருடைய உ யிர்ப்பின் முழு ஆற்றலுடன் உங்களிடம் “இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திரு” என்று உங்களிடம் சொல்கிறார்’ (லூக்கா 7:14), (எண்: 20)

இன்றைய தலைமுறை அறிவைவிட அனுபவத்தையும், பிரதிநிதியாக இருப்பதைவிட பங்கேற்பையும், வார்த்தைகளைவிட உருவத்தையும், தனித்திருப்பதைவிட தொடர்பில் இருப்பதையும் விரும்புகிறது. இவற்றிற்கெல்லாம் சவால் தரும் வகையில் கோவிட் – 19 நோயின் சூழல் சமூக இடைவெளி என்னும் ஒரு புதிய வரையறையை வகுத்துள்ளது. டிஜிட்டல் உலகம் சமூக இடைவெளி என்னும் தடையை தாண்டிச் செல்ல ஒருவகையில் உதவுகிறது. ஆனால் நமது வாழ்வோ சமூக ஊடகங்களிலும், தொழில்நுட்ப பொருட்களிலும் வேரூன்றிவிட்டது. நமது தனிப்பட்ட அறைகளின் அமைதிக்குள்ளும் இது நுழைந்துவிட்டது. இவை நம்மை தொடர்பில் இருக்க செய்தாலும் நாம் வேரற்றவர்களாகவும், பற்றிக்கொள்ள எதுவும் இல்லாதவர்களாகவும் உணர்கிறோம். இந்த உலக பொருட்கள் வாக்களிக்கும் ஆறுதல்கள் கிறிஸ்துவிலும் அவரது வார்த்தையிலும் வேரூன்றவில்லை என்றால் காலைப்பனி போல் மறைந்துவிடும். இன்றைய அனுபவங்களோ நமது பார்வைகளையும், மதிப்பீடுகளையும், முன்னுரிமைகளையும், மறுவாசிப்புச் செய்ய அழைக்கிறது.

பரிவிரக்கம்:

திருத்தந்தை பிரான்சிஸ் லூக்கா நற்செய்தி 7ஆம் அதிகாரம் 13 முதல் 14 வரையுள்ள வசனங்களை சுட்டிக்காட்டி ஒரு தியானத்திற்கு அழைப்புவிடுக்கிறார். கலிலேயாவில் உள்ள நையீன் என்ற பட்டணத்தில் இயேசு நுழைந்த போது நாம் காணும் அவரது சொற்களையும், செயல்களையும் தியானப் பொருளாக்குமாறு கற்பிக்கிறார். இறந்த ஒருவரின் உடலக்க ஊர்வலத்தில் தனது ஒரே மகனை இழந்த விதவையின் வேதனையை இயேசு புரிந்து கொள்கிறார். துன்புறும் மக்களின் துயரங்களை உணரும் ஆற்றல் இன்றைய இளையோர்களுக்கு தேவை. எதிர்பாராத விபத்திற்கும், துன்பத்திற்கும் உட்படுகின்றவர்களின் படங்களையும், சோக்க் கதைகளையும் சமூக வலைத்தளங்களில் பகிர்வதைவிட அவர்கள் மீது அக்கரை காட்டுவதே சிறந்த்து. மலங்கரை கத்தோலிக்க இளையோர் இயக்கத்தின் உறுப்பினர்களாகிய நாம் இயற்கை பேரிடர்களையும், வெள்ளப் பெருக்கையும், நிலச்சரிவுகளையும் கண்டிருக்கிறோம். ஆனால் இப்போது வேலையில்லா திண்டாட்டம், கல்வியிலும் பொருளாதாரத்திலும் குழப்பம், பெருகும் வன்முறை, மதத்தால் சமூகத்தை பிரித்து பார்த்தல், புலம் பெயர்ந்தவர்களின் பிரச்சனைகள் போன்ற பேரிடர்களை சந்திக்கின்றோம். கிறிஸ்தவர்களாகிய நாம் தற்பாதுகாப்பிலிருந்து பிறர்மீதுள்ள அக்கரைக்கும், தனிமனித வாத்த்திலிருந்து ஒத்துழைப்பிற்கும், இயற்கையை சுரண்டுவதிலிருந்து பொதுநன்மையும், (காற்று, நீர்) பொது வீட்டையும் பாதுகாக்கும் பண்பிற்கும் கடந்து செல்வோம். இளைஞர்களை பொறுத்தவரையில் அடுத்த சில ஆண்டுகள் முக்கியத்துவம் வாய்ந்த்தே. மத நம்பிக்கை, சமூகம், திருஅவை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படலாம். இது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தையில் கடவுள் திருஅவைக்கு தரும் நல்ல நிலமாகும். இங்கே எழும் கேள்வி என்பது கோவிட் காலத்திற்கு பின் எழும் சூழலில் இவன் பங்கு என்ன என்பதே ஆகும்.

தைரியமான நற்செய்தியாளர்கள் ஆவோம்:

இயேசு சீடர்களை நோக்கி “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை பறைசாற்றுங்கள் என்றார்” (மாற்கு 16:15, மத்தேயு 28:19-20, லூக்கா 24:47) மறைதூதுப்பணிக்கான இயேசுவின் இக்கட்டளையை இயேசுவின் இறுதிவிருப்பமாக புரிந்துகொள்ளவேண்டும். கிறிஸ்தவ நம்பிக்கையானது நம்பிக்கை அறிக்கை, கோட்பாடு, மறைக்கல்வி, போதனைகள, பத்து கட்டளைகள் போன்ற வடிவங்களில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கிறிஸ்தவ நம்பிக்கை, வாழ்க்கை பாணியாக மாறியிருக்கிறதா என்று வினவினால் அது கேள்விக்குறியே. இயேசுவின் மறைதூதுப்பணிக்கான கட்டளையையும் ‘நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள், நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்’ போன்ற போதனைகளோடு இணைத்து வாசிக்க வேண்டும். ஒளியாகவும், உப்பாகவும் இருந்தால் வாழ்க்கை பாணியும் நம்பிக்கையின் வெளிப்பாடாக மாறும். இதுவே அர்த்தமுள்ள நற்செய்திப்பணி. நற்செய்தி பறைசாற்றுதல் என்பது இயேசுவின் பல்வேறு பணிகளில் ஒன்றல்ல மாறாக அவருடைய முழு பணியும் நற்செய்தி பணியை மையப்படுத்தியதாகவே அமைந்தது. தொடக்ககால கிறிஸ்தவர்கள் உப்பாகவும், ஒளியாகவும் இருந்து இறைவார்த்தைக்கு சான்று பகர்ந்தனர். இதுவே நற்செய்தி பறைசாற்றுதலாகும். திருத்தூதர் பணி இதற்கு சான்று பகிர்கிறது. கிறிஸ்தவ நம்பிக்கை, அவர்களது வாழ்க்கை பாணியாக இருந்தபடியால் ஏராளமானோர் கிறிஸ்தவத்திற்கு ஈர்க்கப்பட்டனர். எனவே இந்தியாவில் மறைதூதுப்பணி என்பது கிறிஸ்தவ நம்பிக்கை வாழ்க்கை முறையாக வாழ்வதில் அடங்கியுள்ளது. கோவிட் – 19 தாக்கிய இந்த உலகில் உப்பாகவும், ஒளியாகவும் மாறுவது எப்படு? எதிர்நோக்கில்லாத அனுபவங்கள் நிறைந்த எதிர்மறைச்சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் நம் எதிர்நோக்கு என்பது தூய ஆவியில் உள்ளது. துன்பங்கள் மற்றும் துயரங்கள் மத்தியில் தூய ஆவி நம்மை வழிநடத்துகிறார். குடும்பங்களிலிருந்தும், சபை சமூகத்திலிருந்தும நாம் பெற்றுகொண்ட நம்பிக்கை செயல்கள் கிறிஸ்தவத்தை உலகில் வாழ்வாக்கும் வழிமுறைகளை கற்பிக்கின்றனர். திருத்தந்தை பிரான்சிஸ் இரக்கத்தையும், எளிமையையும் வலியுறுத்தி நம்பிக்கைக்கு சான்று பகிர்ந்து வாழ நம்மை அழைக்கின்றார். நற்செய்தியின் ஒளியில் வாழும் இளையோர் பிற இளையோர்களுக்கு நற்செய்தியாளர்களே (உச:ய்ர் 24) நம்பிக்கைக்கு இளையோர் தரும் சாட்சியம் ஆற்றல் மிக்கது.

எதிர்நோக்குடன் நம்பிக்கையில் வாழ்வோம், பகிர்வோம். நம்பிக்கையை வாழ்ந்து, நற்செய்தி பணியாளர்களாக மாறி நமது நம்பிக்கையை வாழ்க்கை பாணியாக மாற்றுவோம். இத்தருணத்தில் இளையோர் திருப்பணியில் இருக்கும் அனைவரையும் வாழ்த்துகிறேன். திருத்தந்தை பிரான்சிஸ் இளையோர்களை பார்த்து இளைவனுடைய ‘இப்போது’ நீங்கள் என்கிறார். ஏனெனில் இயேசு கடவுளின் நன்மையின் வெளிப்பாடாக உள்ளார். அவர் உங்களுக்கு தொலைவில் இருப்பவர் அல்ல. உங்களது இளமைக்குள்ளே இருந்துகொண்டு அவரது இளமையை பகிர்ந்து கொள்கிறார். இளம் இயேசுவை ஆழ்ந்து தியானிப்பது சால சிறந்தது. (கிறிஸ்து வாழ்கிறார் எண் 31). எருசலேமிலிருந்து எம்மாவோசுக்கு கடந்து சென்ற சீடர்களுடன் இயேசு உடன் பயணிக்கிறார். இளையோர் பணி என்பது உடன் பயணித்தல் ஆகும்.

இவ்வருட இளையோர் தினத்தை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடும்படி அழைப்பு விடுக்கின்றேன். MCYM-ன் தேசிய அமைப்பு கீழ்காணும் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துகிறது. அக்டோபர் மாதம் 3ஆம் தியதி மாலை 4 மணிக்கு அகில உலக வினாடிவினா போட்டி நிகழ்நிலையில் (Online-ல்) நடைபெறும். அக்டோபர் மாதம் 4ஆம் தியதி ஞாயிற்றுகிழமை காலை 8:30 மணிக்கு திருவனந்தபுரம் உயர் பேராய இல்ல சிற்றாலயத்தில் வைத்து அதிமேன்மை தங்கிய மோறான் மோர் பசேலியோஸ் கர்தினால் கிளீமஸ் காதோலிக்க பாவா அவர்கள் திருஅவையில் உள்ள அனைத்து இளையோர்களுக்காகவும், இளையோர் பணியில் இருப்பவர்களுக்காகவும் திருப்பலி ஒப்புகொடுப்பார். இத்திருப்பலி அதிகாரபூர்வமான ஊடகங்கள் வாயிலாக நேரலையாக தரப்படும். திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்று திருச்சபையின் தலைவரும் தந்தையுமாகிய காதோலிக்க பாவாவின் வார்த்தைகளுக்கு செவிமடுப்போம். திருப்பலியை தொடர்ந்து அகில உலக இளையோர் கூடுகை நிகழ்நிலையில் (Online-ல்) நடத்தப்படும். அதிமேன்மை தங்கிய உயர் பேராயர் தொடங்கி வைக்கும் இக்கூட்டத்தில் கேரள கத்தோலிக்க இளையோர் பணிக்குழுவின் தலைவர் (KCYM) மேதகு கிறிஸ்துதாஸ் ஆண்டகை இளையோர் சமூகத்தை வாழ்த்தி பேசுவார். அக்டோபர் மாதம் 28ஆம் தியதி முதல் நவம்பர் மாதம் 1ஆம் தியதி வரையுள்ள நாட்களில் இரவு 9 மணிக்கு அருள்தந்தை டானியேல் பூவண்ணத்தில் வழிநடத்தும் நிகழ்நிலை (Online) இளையோர் தியானம் நடைபெறும். MCYMஇன் அதிகாரபூர்வ சமூக ஊடகங்கள் வாயிலாக இவை நேரலையாக தரப்படும். நிகழ்நிலை வாயிலாக நடைபெறும் இந்நிகழ்வுகளில் பங்கேற்க இளையோர் அனைவரும் இதயபூர்வம் வரவேற்கிறேன்.

இளையோர் தின காணிக்கையை மறைமாவட்ட நிதி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுகொள்கிறேன். உங்கள் காணிக்கையின் ஒரு பகுதி மறைமாவட்ட இளையோர் பணிக்கும், மறு பகுதி சபை அளவிலான இளையோர் பணிகளுக்குமாக, காதோலிக்கேட் மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அனைவருக்கும் அருள்நிறைந்த அனுபவம் கிடைக்க ஜெபிக்கிறேன்.

இறைவன் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக.

இவண்

மேதகு வின்சென்ட் மார் பவுலோஸ்

ஆயர்மாமன்ற இளையோர் பணிக்குழு தலைவர்,

மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர்

காதோலிக்கேட் சென்றர்

பட்டம், திருவனந்தபுரம்